Monday, November 28, 2011

சைக்கிள் கேப்பில் சைட் அடிக்கும் பெண்கள்!


சைக்கிள் கேப்பில் சைட் அடிக்கும் பெண்கள்!


நம்மில் பலர் எம் வாழ் நாளில் என்றோ ஒரு நாள் நம்மை; ஒருத்தனோ ஒருத்தியோ திரும்பிப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கத்தினைத் தாங்கியவர்களாக எம் இளமைப் பருவத்தினைக் கடந்து வந்திருப்போம். ஆணுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் காத்திருக்கும் விடயங்களை விட; "தன்னைப் பார்த்து ரசிக்க ஒருவர் காத்திருப்பாரே" எனும் ஆவலுடன் அழகுபடுத்திச் செல்லும் நிகழ்வுகள் இருக்கிறதே! அப்பாடா! அவை பருவ வயது மாற்றத்திற்கமைவாக எம்மை விட்டுத் தூர விலகிச் சென்றிருப்பது போலத் தோன்றினாலும், மீளவும் நினைத்துப் பார்க்கையில் சுகம் தரும் நினைவுகளாக அல்லவா இருக்கின்றன.


பள்ளியில் படிக்கும் போது எம்மில் பலருக்கு 13-16 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பும், எதிர் பாலாரினைக் கண்டு விலகி நடக்கும் போது அவர்கள் எம்மைப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கமும் இயல்பாகவே எழுந்திருக்கும். அதிலும் நாம் டீன் ஏஜ் பருவத்தினை எட்ட முன்பதாகவே நம்முடன் கூடப் படிக்கும் எதிர்ப் பாலாரைப் பற்றிய சிறிய சிறிய விடயங்களில் கொஞ்சம் அக்கறை செலுத்த தொடங்கி விடுவோம். இதுவே மெது மெதுவாக சைற்(ட்) அடித்தல் என்ற நிலையினை நோக்கி எம்மை நகர்த்த ஆரம்பித்து விடுகின்றது. 

சிறு வயதில் எம்மோடு கல்வி கற்கும் எதிர்ப் பாலாரில் எமது இயல்பிற்கேற்றவாறு ஒருவரைச் சோடி கட்டி பட்டம் பளிக்கத் தொடங்கி விடுவார்கள். இந்த விடயமும் பின் நாளில் அதே ஆள் மீதான பிரியம் அதிகரிப்பதற்கு காரணமாக ஆகி விடுகின்றது. ஆண்களையும், பெண்களையும் பொறுத்த வரை கல்லூரி வாழ்வில் பலரைத் திருட்டுத் தனமாக ரசிக்கின்ற இயல்பு தான் அதிகமாக காணப்படும். ஆண்களின் பொதுவான குணவியல்பு கொஞ்சம் அழகான, மா நிறம் போன்ற பெண்ணை அல்லது வெள்ளை நிறப் பெண்ணை கண்டு பின் தொடர ஆரம்பிப்பதாகும். ஆனால் பெண்களின் குணவியல்பு இந்த விடயத்தில் அலைய விட்டு தன்னை ரசிக்கப் பலர் இருக்கிறார்களே எனப் பெருமிதம் கொள்வதாக அமைந்து கொள்ளும். 

தனக்குப் பின்னால் பல ஆண்கள் சைற் அடிப்பதற்காக அலைகின்ற போது தான் ஓர் தேவதை போன்ற நிலையினை உணர்வதாக என்னுடன் காலேஜ்ஜில் படித்த நண்பி ஒருத்தி கூறினாள். 13-16 வயதுகளில் ஆண்களிடையே ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பல்வேறுபட்ட விகாரமான மன உணர்வுகளை ஆண்களிடத்தே தூண்டுதற்கும் காரணமாக அமைந்து கொள்கின்றது. பாடசாலை செல்லும் போது காற் சட்டைப் பாக்கட்டினுள் சீப்பு கொண்டு போதல், பவுடர் கொண்டு செல்லுதல் முதலியவை இந்த சைற் அடித்தல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும். பாடசாலை முடியும் தருணம் ஆண்கள் ஓடிச் சென்று பள்ளிக் கூட டாய்லெட்டினுள் உள்ள கண்ணாடியினைப் பார்த்து தம் தலையினை வாரி, பவுடரைப் பூசித் தம்மை அலங்கரிக்கத் தொடங்கி விடுவார்கள். 

பள்ளிக் கூட டாய்லெட்டில் கண்ணாடி இல்லை என்றாலே போதும். இருக்கவே இருக்கு கைக்கு அடக்கமான வட்டக் கண்ணாடி. சைட் அடிக்க மேக்கப் பண்ணும் பசங்களில் யாராச்சும் ஒருத்தன் இந்தக் கண்ணாடியைத் தன் பாக்கெட்டினுள் (POCKET) வைத்திருப்பான். மேக்கப் பண்ணி, வாசம் நிறைந்த பவுடரை மூஞ்சி முழுக்க பூசிய பின் பாடசாலை நிறை வடைந்ததும் ஓடிச் சென்று லேடீஸ் ஸ்கூலுக்கு முன்னாடி காத்திருக்க வேண்டியது தான் நம்ம பசங்களோட வேலை. இந்த வேளையில் நம்ம பசங்களில் சிலர் கூட்டமாக நின்று தான் பொண்ணுங்களை லுக்கு விட்டுப் பார்ப்பாங்க. 

ஏடா கூடமாக அடுத்த காலேஜ் பசங்க இவங்க வழியில குறுக்கிட்டாலே போதும். தம்மை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக லேடிஸ் ஸ்கூலுக்கு முன்னாடியே காண்பித்து பெண்டை நிமிர்த்திடுவாங்க. அன்றைய காலத்தில் சைட் அடிக்கும் போதெல்லாம் நாம சைக்கிளைத் தான் பின் தொடருவதற்கு யூஸ் பண்ணியிருப்போம். ஆனால் இன்றைய காலப் பசங்க மோட்டார் சைக்கிளை அல்லவா யூஸ் பண்றாங்க. சைக்கிளில் லேடீஸ் ஸ்கூல் முன்னாடி இருந்து ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது உச்சி வெய்யில் அதிகமாக இருந்தால் டயர் பஞ்சராகிடும். அப்புறம் என்ன சைக்கிளை உருட்டிக் கொன்று நடக்க வேண்டியது தான்.

பொண்ணுங்களை ஆண்கள் பார்க்க முன்னாடி தெரிஞ்சிருக்க வேண்டிய மொதல் மேட்டர் கண்ணடிப்பது. ஒரு பெண்ணை ஆண் மெதுவாக கடந்து செல்லும் போது வலது கண்ணால் ஜாடை காட்டத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணடிக்கத் தெரியலைன்னா கவலை வேணாம். பள்ளியில் இந்த மேட்டரில PHD முடிச்ச ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். அவன் எமக்கு கண் அடிப்பது முதல், விசில் அடித்து (சீழ்க்காய்) அடித்து முன்னாலே போகும் பெண்ணைத் திரும்பிப் பார்க்க பண்ணுவது எப்படி என்பது வரை அழகாக சொல்லிக் கொடுப்பான். பெண்களுக்கும் இந்த மாதிரியான பயிற்சிகளை அவர்களின் கல்லூரித் தோழிகள் சொல்லிக் கொடுப்பார்கள். 

இந்த மேட்டரில பெண்கள் கழுவுற தண்ணீரில் நழுவுகின்ற மீன் மாதிரித் தான் நடந்து கொள்வார்கள். தமக்கு எதிரே வரும் ஆண்களைப் பார்த்து மெதுவாக கண்ணால் ஜாடை காட்டி விட்டுப் பெண்கள் பார்த்தும், பார்க்காதது போன்று சென்று விடுவார்கள். அப்பாவிப் பையன் மனமோ "தம்மையும் ஒருத்தி பார்த்துக் கண்ணடித்து விட்டாளே!" எனும் எண்ணத்தில் அவள் பின்னே அலையும். காலேஜ்ஜில் படித்த காலத்தில்; ஒரு பெண்ணிடம் உரையாடிய போது, தமக்குப் பின்னே பல ஆண்களை வர வைப்பது, அலைய வைப்பது தமது மனதிற்கு இன்பமாகவும், தம்மை தாம் வசிக்கும் ஏரியாவில் ஹீரோயின் போல காண்பிப்பதற்கும் ஏதுவாக அமையும் என்றும் கூறினாள். 

பல பேரை அலைய விட்டுப் பார்ப்பது தான் அதிகமான பெண்களின் நோக்கமாக இருக்கும் எனவும் கூறினாள் அவள். நமக்குப் பின்னே வரும் எல்லா ஆண்களோடும் நாம் பேச மாட்டோம். ஒவ்வோர் நாளும் நமக்குப் பின்னே அலைய வேண்டும் எனும் நோக்கில் புது ட்ரெஸ் வாங்கி உடுத்தி வரும் ஆண்களும் உண்டு என கூறினாள் அவள். பெண்களுக்குள்ளே போட்டி நடக்குமாம். யாருக்குப் பின்னே அதிகளவான பசங்க வாறாங்க எனும் போட்டி காரணமாகவே; "தாம் ஒரே ஒரு தடவை ஒரு பையனைப் பார்த்தும் பார்க்காதது போன்று கண்ணால் ஜாடை காட்டி விட்டுச் சென்று விடுவோம்" என்று கூறினாள் மற்றுமோர் நண்பி. 

தொடர்ச்சியாக நம்மை ஒருவர் பின் தொடர்ந்து வந்து சைற் அடிக்கும் போது; "இவர் வேணாம், இவரை இத்தோடு Stop பண்ணிடனும் என நினைத்தால் உடனடியாக பின்னே திரும்பி பார்ப்போம். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ள ஆணாக இருந்தால் அன்றுடன் பின் தொடருவதை நிறுத்திடுவான்." அதனையும் மீறி அவன் வந்தால் "ஏன்டா நாயே! உனக்கு வேற வேலை இல்லையா? செருப்பு பிஞ்சிடும் என்று பேசினாலே" போதும் என்றாள் இன்னோர் நண்பி. பெண்களின் உள் மனதிலும் திருட்டுத் தனமாக ஆண்களைச் சைட் அடிக்கும் பழக்கம் இருக்கின்றது.